தமிழ்நாட்டுக்கு 2 ஆண்டுகளில் ரூ.276 கோடி வழங்கப்பட்டது மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
புதுடெல்லி, ஆக. 8-
2 ஆண்டுகளில், புயல், வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ. 276 கோடி வழங்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது.
கர்நாடகாவுக்கு அதிக நிதி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-
கடந்த 2022-2023, 2023-2024 ஆகிய 2 நிதியாண்டுகளில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு வழங்கிய நிதி விவரத்தை தெரிவிக்கிறேன்.
மேற்கண்ட 2 ஆண்டுகளில், கர்நாடகா, இமாசலபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களுக்குத்தான் அதிகமான நிதி வழங்கப்பட்டது.
கர்நாடகாவுக்கு ரூ. 941 கோடி வழங்க மத்திய குழு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு ரூ. 939 கோடி வழங்கியது. இமாசலபிரதேசத்துக்கு ரூ. 873 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு ரூ. 812 கோடி வழங்கியது. அசாம் மாநிலத்துக்கு ரூ. 594 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ரூ. 160 கோடி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
மேற்கண்ட 2 ஆண்டுகளில், தமிழ்நாட்டுக்கு புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்காக ரூ. 276 கோடி வழங்கப்பட்டது. சிக்கிம் மாநிலத்துக்கு ரூ. 267 கோடியும், நாகலாந்துக்கு ரூ. 68 கோடியும் வழங்கப்பட்டன.
மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ‘ரிமல்’ புயல் பாதிப்பையும், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் நிலச்சரிவு பாதிப்பையும் நேரில் ஆய்வு செய்து மதிப்பிட மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேறுபாடு ஏன்?
பொதுவாக, தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது உடனடி நிவாரண பணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. நீண்ட கால மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற பணிகளுக்காக அல்ல. எனவேதான், மாநில அரசுகள் கேட்கும் தொகைக்கும், மத்திய அரசு ஒதுக்கும் நிதிக்கும் இடையே பெரும் வேறுபாடு காணப்படுகிறது.
நிதிக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி ஆகிய இரண்டிலும் வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் அடிப்படையில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த விதிமுறைகள், மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தில் காணப்படுகின்றன.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு தனது பங்கை 2 சமமான தவணைகளாக மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
குறைபாடுகள் முடித்துவைப்பு
மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
நடப்பாண்டில் கடந்த மாதம் 31-ம் தேதிவரை, இணையதளம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 14 லட்சத்து 41 ஆயிரம் குறைபாடுகள் பெறப்பட்டன. அவற்றில் இதுவரை 13 லட்சத்து 75 ஆயிரம் குறைபாடுகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 60 ஆயிரத்து 60 குறைபாடுகள் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
