அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவை விடுவித்தது செல்லாது
மறு விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஆக. 9-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவை விடுவித்தது செல்லாது என்றும், மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அமைச்சர்கள்
தமிழ்நாடு நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்து 433 அளவுக்கு சொத்து குவித்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல, தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக உள்ள சாத்தூர் ராமச்சந்திரன், 2006 – 2011-ம் ஆண்டு நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவரும், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோர் ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 67 அளவுக்கு சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்
இந்த 2 வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு, போலீசார் தாக்கல் செய்த கூடுதல் அறிக்கையின் அடிப்படையில், அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி
என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாரணைக்கு எடுத்தார். பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
போலீஸ் பொம்மை
இந்த வழக்கில் அரசியல்வாதிகளில் கைப்பொம்மையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மீண்டும் அமைச்சரானதும், அதாவது மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததும், அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப போலீசார் செயல்பட்டுள்ளனர். வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேல்விசாரணை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை காப்பாற்றும் விதமாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற தந்திரங்களை அரசியல்வாதிகள் அல்லாத சாதாரண மக்கள் மீதான வழக்குகளில் போலீசார் கையாண்டுள்ளனரா? என்றால் இல்லை.
நீதிபரிபாலனம்
இதுபோன்ற செயல் தமிழ்நாட்டை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. குற்றம் சாட்டப்பட்டவர்களும், போலீசாரும் கூட்டு சேர்ந்து நீதிபரிபாலனத்தை கையகப்படுத்தி விடாத அளவுக்கு விசாரணை நீதிமன்றங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த வழக்குகளில் போலீசாரும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் கூட்டு சேர்ந்து செயல்பட்டு உள்ளனர். தெரிந்தோ, தெரியாமலோ ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு இவர்களுக்கு இரையாகியுள்ளது.
சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 2016-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச், மே மாதங்களில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேல்விசாரணை
2021-ம் ஆண்டு மே மாதம் சாத்தூர் ராமச்சந்திரனும், தங்கம்தென்னரசும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான எழுத்துப்பூர்வமான வாதத்தை 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி அமைச்சர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அமைச்சர்கள் இருவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை மேல்விசாரணை நடத்த அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி மனு தாக்கல் செய்துள்ளனர். பின்னர், 2022-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி, அமைச்சர்கள் மீதான வழக்குகளை முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
எல்லாம் ஒரே நாளில்…
இதன் அடிப்படையில், தங்கம் தென்னரசுவை 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதியும், சாத்தூர் ராமச்சந்திரனை 2023-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதியும் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அதாவது, 2 வழக்குகளிலும் போலீசாரும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே நாளில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவரங்களை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு கவனிக்க தவறியுள்ளது.
அனைவரும் சமம்
இவையெல்லாம் தெரியவந்ததும், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமையை இந்த ஐகோர்ட்டு ஆற்றியுள்ளது. சட்டத்தின் ஆட்சி என்பது, கசாப்புக் கடைக்காரர், ரொட்டி சுடுபவர், மெழுகுவர்த்தி செய்பவர் உள்ளிட்டோரும், அமைச்சர்களும் நீதிமன்றங்கள் முன்பு சரிசமமானவர்கள்தான்.
சட்டத்தின் வலை மிகவும் பரந்த அளவில் உள்ளன. ஆனால், பெரிய மீன்கள் மட்டும் இந்த அதிசய வலையில் இருந்து தப்பித்து விடுகின்றன என்று மேலைநாட்டு கவிஞர் ஜேம்ஸ் ஜெப்ரி ரோச் கவிதையை எடுத்துக்கூறி கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பிக்கின்றேன்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவை 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதியும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை 2023-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதியும், மற்றும் பிறரையும் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.
ஆஜராக வேண்டும்
இவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும். இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் விசாரணை நடத்தி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி தாக்கல் செய்த அறிக்கையை, கூடுதல் விசாரணை அறிக்கையாக சிறப்பு கோர்ட்டு பாவிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களை முடித்து வைக்கிறேன்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வருகிற செப்டம்பர் 9-ந் தேதியும், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வருகிற செப்டம்பர் 11-ந் தேதியும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
விரைவாக தீர்ப்பு
இவர்கள் மீதான வழக்குகள் 2012-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என்பதால், இந்த வழக்குகளை தினந்தோறும் என்ற அடிப்படையில் சிறப்பு கோர்ட்டு விசாரித்து, விரைவாக தீர்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறி யுள்ளார்.
