2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,120 சரிவு
சென்னை, ஆக.8-
தங்கம் விலை 2-வது நாளாக இறங்குமுகத்தில் இருக்கிறது. 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, கடந்த 4 மாதங்களுக்கு பிறகு ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.
தங்கம் விலை
தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கிடுகிடுவென உயரத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை கடந்து யாரும் எதிர்பாராத வகையில் விலை அதிகரித்து கொண்டே சென்றது.
இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. தொடர்ந்தும் விலை சரிந்து கொண்டே வந்தது. படிப்படியாக விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை கடந்த நிலையில், விலை சரியத் தொடங்கியது. எந்த வேகத்தில் அதிகரித்ததோ, அதே வேகத்தில் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.
பவுனுக்கு ரூ.560 சரிவு
அந்த வகையில் கடந்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்த தங்கம் விலை, அதன் பின்னர் சற்று உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மீண்டும் இறங்குமுகத்தை நோக்கி பயணிக்கிறது.
நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 330-க்கும், ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,120-ம், இறக்குமதி வரி குறைப்பு அறிவிப்பு வெளியானதில் தற்போது வரையில் ரூ.3,960 அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது.
ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. அதன் பின்னர் விலை ஏற்றத்தில்தான் காணப்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு, ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. இதே வேகத்தில் குறைந்தால் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் தங்கம் விற்பனை ஆவதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்த நிலையில், நேற்று அதன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.87-க்கும், ஒரு கிலோ ரூ.87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தங்கம் வாங்கும் இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
