முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப்பேரணி

  • கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப்பேரணி

நினைவிடத்தில் மலர் அஞ்சலி

சென்னை, ஆக.8-

கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப்பேரணியாக சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அமைதிப்பேரணி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலை மற்றும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடம் ஆகியவை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப்பேரணி மேற்கொண்டனர். இதற்காக நேற்று காலை முதலே தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள கருணாநிதி சிலை அருகே குவியத் தொடங்கினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 8 மணிக்கு கருணாநிதி சிலை இருக்கும் இடத்திற்கு வருகை தந்தார். அதைத் தொடர்ந்து கருணாநிதியின் சிலை அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவிடம்

பின்னர் அமைதிப்பேரணி தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைதிப்பேரணியில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட எம்.பி.க்கள், மு.க.தமிழரசு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இணை செயலாளர்கள் பி.டி.பாண்டிச்செல்வன், வி.பி.மணி, இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியானது காலை 8.47 மணிக்கு தொடங்கி வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தை வந்தடைந்தது.

மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி முழுஉருவச் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் முரசொலி வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கும் அஞ்சலி செலுத்தினார்.

இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி நினைவு நாளையொட்டி அவரது சிலை, திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடும்பத்தினர் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் அவரது துணைவியார் ராசாத்தியம்மாள், முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். இதே போன்று கவிஞர் வைரமுத்துவும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.அகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

சமூக வலைத்தள பதிவு

கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை எல்லாம் பட்டியலிட்டு அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கருணாநிதியின் பெயர் உயர்ந்து நிற்கும், உயிரென நிற்கும்.

ஆறாத வடுவென ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு.

இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வு கொண்டிருக்கும் கடற்கரைக்கு தொண்டர்கள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் அவர் கட்டிய படை பீடுநடை போடும். தமிழும், தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்” என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப்பேரணி - Cadgraf News